There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

கதையின் கதை

Feb 21, 2011



... “ந்த ராஜாவும் மந்திரியும் தனித்தனிக் குதிரையில ஒரு பெரிய்ய்ய ஆலமரம் ஒன்னைக் கடந்து போய்ட்டு இருந்தாங்களாம். ரொம்பக் களைச்சுப் போயிருந்த அந்த ரெண்டுபேருல ஒருத்தரான மந்திரிக்கு மட்டும் ஆலமரத்தில அமர்ந்திருந்த அந்த ஆண்கிளியும் பெண்கிளியும் பேசிட்டு இருந்த சத்தம் தெள்ளத்தெளிவாக் கேட்டுச்சாம். “இதோ குதிரையில் போகிறார்களே ஒரு ராஜாவும் மந்திரியும், இவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். இந்த ராஜாவுக்கு எண்ணி இரு பௌர்ணமிகளுக்குள் உயிர்போகும் அபாயமிருக்கிறது. யார் நினைத்தாலும் அவனைக் காப்பாற்றவே முடியாது! அவனது உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு குகையில் கூண்டிற்குள் கைதாகியிருக்கும் ஒரு பஞ்சவர்ணக்கிளியின் விடுதலையில் இருக்கிறது. இந்த ராஜா அவன் கையாலேயே அதை விடுவித்தாக வேண்டும்...” “இரு பௌர்ணமிகளுக்குள் அவன் அந்தக் கிளியை விடுவித்து விட்டால்?” “அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த ராஜாவின் உயிர் பற்றிய ரகசியம் அறிந்தவர்கள் இந்த உலகினில் மூன்றே பேர்தான். ஒன்று நான்; ஒன்று நீ; மற்றொன்று அவனது உடன் இருந்து இப்போது நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மந்திரி. ராஜாவின் உயிர் பற்றிய இந்த இரகசியத்தை வெளியே கூறினால் கூறுபவனின் தலை வெடித்துச் சிதறி அக்கணமே அவனது உயிர் போய்விடும். எனவே ராஜாவைக் காப்பாற்றுவதற்கு வழியேயில்லை...” இதக் கேட்டுட்டிருந்த மந்திரி ராஜாவோட உயிர எப்படிக் காப்பாத்துறதுனு நினைச்சுக் குழம்பிப் போக ஆரம்பிச்சிட்டான்...”
“இந்தக் கதை வேண்டாம் ஆச்சி.. இது நல்லாயில்ல..” “ம்ம்... சரி அப்போ, சீதைக்காக மான் பிடிச்சிட்டு வர்றேன்னு ராமன் போவானே...அது சொல்லவா?” “வேண்டா வேண்டாம்... அந்தத் தக்காளிப் பழமும் கத்திரிக்காவும் சுண்டக்காவும் வெண்டக்காவும் மார்க்கெட்டுக்குப் போகும்ல.. அந்தக் கதை சொல்லேன்...”



... “ப்போ மரத்துல இருந்த காக்கா, வடையக் கால்ல வெச்சுக்கிட்டு கா…கா..கா…ன்னு கத்துச்சாம். ஏமாந்த நரி அங்கயிருந்து ஓடியே போச்சாம்...”
“ஏய்.. இல்லடே.. நீ தப்பாச் சொல்லுத. அந்தக் காக்கா கத்தும்போது வடை கீழ தான் உழும். அத நரி எடுத்துக்கிட்டு ஓடிப் போயிரும்”
“இல்ல.. இல்ல.. எங்க மிஸ்ஸு சொன்னாங்கல.. அது வேற காக்காவாம். அந்த புக்ல தப்பா குடுத்துட்டாங்களாம்...”



...“ந்த ஹேப்பி ப்ரின்ஸ் சிலை.. “ஸ்வாலோ ஸ்வாலோ… லிட்டில் ஸ்வாலோ.. வில் யூ பி வித் மீ ஃபார் வன்மோர் நைட்?” அப்படின்னு ரொம்பத் தயக்கமா கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டுச்சாம். “நீ இப்படியே கேட்டுட்டே இருக்க. என் சொந்தக்காரப் பறவைங்க எல்லாம் ஆறு வாரத்துக்கு முன்னாலயே எகிப்துக்குப் பறந்து போயிட்டாங்க. இன்னும் ஒரு நாள் உன்கூட இங்க நான் இருந்தாக் கூட இந்தக் குளிர்ல நான் செத்துப் போயிருவேன். அதனால நானும் போறேனே”ன்னு அந்தக் குட்டிக் குருவியும் பதிலுக்குக் கெஞ்சிக் கேட்டுச்சாம். அதுக்கு அந்த ஹேப்பி ப்ரின்ஸ், “...என் கண்ணுல இருந்த கற்களையும் கொடுத்தாச்சு. எனக்கு இப்போ பார்வையே கிடையாது. ஆனா, நீ பார்த்துட்டு வந்தல்ல? அந்த ரெண்டு குழந்தைகளும் பசியில அழுதுட்டு இருக்காங்களே. கடைசியா இந்த ஒன்னு மட்டும் செய்யேன்.. என் உடம்புல இருக்குற தங்கப் பூச்சையெல்லாம் அப்படியே பெயர்த்து எடுத்து அவங்க கிட்ட கொடுத்திர்றயா? ப்ளீ..ஸ்”னு கெஞ்சிச்சாம். மறுக்க முடியாத அந்தக் குருவியும் அப்படியே செஞ்சு அந்தக் குழந்தைகளைச் சிரிக்க வெச்சிச்சாம். இப்படியே சுரண்டிச் சுரண்டித் தன்னோட மதிப்பு முழுவதும் இழந்து போன ஹேப்பி ப்ரின்ஸ் சிலை, அந்தக் குருவியைப் பார்த்து “எனக்காக என்ன உதவியெல்லாம் செஞ்சிருக்க...! ஐ லவ் யூ. என் உதட்டுல வந்து முத்தம் கொடு”னு சொன்னதும் பாதி உயிராப் போயிருந்த அந்தக் குருவியும் அப்படியே செய்ததும் பொத்துனு அவரோட கால்ல விழுந்து செத்துப் போச்சு. அதை உணர்ந்த அந்தப் ப்ரின்ஸோட சிலைக்குள்ள ஏதோ உடையற சத்தம் கேட்டதாம். விழுந்தது அவரது இதயம்...”



... “ப்புறமா அந்த அரக்கன் “வழிப்போக்கர்களுக்கு எல்லாம் இங்கே அனுமதி இல்லை”ங்கிற அந்த போர்டை எடுத்துட்டானாம். அதுக்கப்புறம் அவனோட தோட்டம் எல்லாம் பூத்துக் குலுங்கிக் காய்ச்சுச் கனிஞ்சு செழிக்க ஆரம்பிச்சிடுச்சு. அந்தக் குழந்தைங்க எல்லாம் மறுபடியும் அந்த அரக்கனோட தோட்டத்துக்குள்ள வந்து விளையாட ஆரம்பிச்சாங்களாம்”...



...ந்தத் தீவுல தனியா மாட்டிக்கிட்டு நடந்து போயிட்டு இருந்தப்போ அவ்வளவு பெருசா வட்ட வடிவத்துல வெள்ளை நிறமா மண்ணுக்குள் பாதி புதைஞ்சிருந்த அந்தப் பொருள் ஒரு பெரிய ராட்சஸ பறவையோட முட்டைனு கண்டுபிடிச்ச சிந்துபாத், யோசிச்சிட்டு இருக்கும்போதே தூரத்துல அந்தப் பறவை பறந்து வர்ற சத்தம் கேட்டது. உடனே அங்கே கிடைத்த ஒரு கயிறு ஒன்றின் ஒரு பக்கத்த தன்னோட உடம்புல கட்டிக்கிட்டு அப்படியே தரையோட தரையா படுத்துக்கிட்டான். பக்கத்துல வந்த பறவை அந்த முட்டைமீது உட்கார்ந்திருந்த கொஞ்ச நேரத்துல அந்தப் பறவையோட கால் விரலோ நகமோ ஏதோ ஒன்னுல அந்தக் கயிறோட இன்னொரு முனையைக் கட்டிக்கிட்டு அதோடு சேர்ந்து தானும் பறக்கக் காத்துட்டு இருந்தான்...”



...ழுதுகொண்டு தனது காதலியின் சடலத்தை அவளது குழந்தையின் சடலத்தோடு சேர்த்துப் புதைத்த அவன், “ஓ பெய்ருட் நகரில் சிதறிக்கிடக்கும் எனது நண்பர்களே..! பைன்மரக் காட்டின் அருகே இருக்கும் இந்தச் சமாதியைக் கடந்து செல்லும் போது அமைதியாக நுழைந்து மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்து செல்லுங்கள். உங்கள் காலடி ஓசைகள் இறந்து போனவளின் உறக்கத்தைக் கலைத்துவிடக் கூடாது; செல்மாவின் கல்லறையின் முன்பு பணிவாக நின்று அவளது உடலைப் போர்த்தியிருக்கும் இந்த மண்ணை வாழ்த்திவிட்டு ஆழ்ந்த பெருமூச்சுடன் என் பெயரை உச்சரித்துவிட்டு உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளுங்கள்.. “காதல் கைதியாகக் கடல்கள் கடந்து வாழ்கின்ற ஜிப்ரானின் நம்பிக்கைகள் அனைத்தும் இங்கே தான் புதைக்கப்பட்டன. இந்த இடத்தில் தான் அவன் தனது மகிழ்ச்சியை இழந்தான், கண்ணீர் வற்றிப் போனான், தனது சிரிப்பை மறந்தான்...”



...தன் எதிரே, ஏக்கத்துடன் நின்றான் கரியன்! "பழம், ஒரு அணாடா, பயலே-காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமா - போடா" என்று விரட்டினான், கடைக்காரன். கரியன் அறிவானா, பாபம், தன் கொல்லையிலே இருந்த செவ்வாழை, இப்போது கடையில் கொலு வீற்றிருக்கிறது என்ற விந்தையை! பாபம்! எத்தனையோ நாள் அந்தச் சிறுவன், தண்ணீர் பாய்ச்சினான், பழம் கிடைக்குமென்று! பழம் இருக்கிறது; கரியனுக்கு எட்டாத இடத்தில்! விசாரத்தோடு வீட்டிற்கு வந்தான் வறுத்த கடலையை வாங்கிக் கொரித்துக் கொண்டே...”



பேனாவை மூடாமல் தூக்கிப் போட்டுவிட்டுப் பாதி குடிக்காமல் மறந்திருந்த காப்பியை வீண்செய்ய மனதின்றி வாயில் கடக்கென்று ஊற்றிவிட்டு டக்கென்று டம்ப்ளரை மேஜைமீது வைக்கவும் அம்மா எனது அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.
“பத்திரிகைக்குக் ‘கதை எழுதுறேன்...கதை எழுதுறேன்’னு இப்படியே பித்துப் பிடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்கியே, இன்னும் ஒன்னும் எழுதலையா ராசா?” என எதிரிலிருந்த வெற்றுத் தாள்களை நோட்டமிட்டுக் கொண்டே எனது தலையைக் கோதிவிட்ட அம்மாவின் கரங்களை விலக்கிக்கொண்டு ஒரு முடிவுடன் எழுந்தேன்.
“அப்பா எங்க? சாப்பிட வந்தாரா?” அம்மாவின் புருவங்கள் உயர்ந்ததன.
“இல்லப்பா.. இன்னைக்குக் கடையில கூட்டம் ஜாஸ்தி போல, நகரமுடியல”
“சரி. எனக்குச் சாப்பாடு போடு. சாப்டுட்டு நான் கடைக்குப் போயிட்டு அப்பாவ வீட்டுக்கு வரச்சொல்றேன். மதியம் தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்”
“...”
“அம்மா...”
தாழ்ந்திருந்த பார்வையுடன் தொடர்ந்தேன்.. “இனிமே கடை என் பொறுப்புனு அப்பாகிட்ட நான் சொன்னேன்னு சொல்றியா?”
**
Read More...

காதல்

Feb 14, 2011



காதல்..

ஒட்டுமொத்த உணர்வுகளையும்
உறையச் செய்துவிட்டு
ஒற்றைக்கால் மெழுகாய்
உருகிக் கொண்டிருக்கும்.

வார்த்தையில் வடிக்க எண்ணிக்
காத்திருக்கும் போதெல்லாம்
மொழியின் ஆளுமை
விழிபிதுங்கி நிற்கும்..
Read More...

ஆகாசவாணி அனுபவம்

Feb 9, 2011


வணக்கம்! பரீட்சை ஒன்றை எதிர்கொள்ள உள்ளதால் வலைப்பூ பக்கமே வரமுடியவில்லை :-) இந்த மாதம் முழுவதும் அப்படித்தான். சரி இங்கே எழுத முடியாவிட்டாலும் இட்லிவடையில் எனது பதிவு ஒன்று வெளியாகியிருக்கிறது! ஆல் இண்டியா ரேடியோ திருநெல்வேலி வானொலி நிலையத்தில் நான் நிகழ்ச்சிகள் புரிந்த அனுபவம் பற்றி ஒரு கட்டுரை. அதன் லின்க் கீழே:
 
படிச்சிட்டு கமெண்ட் பண்ணுவீங்கனு எதிர்பார்க்கிறேன்.. நன்றி :-)

 
Special Thanks : Idlyvadai-இட்லிவடை








சமூக விழிப்புணர்வு சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டு வரும் கழுகு வலைத்தளத்திற்கு வாழ்த்துகள்...!
வலை : கழுகு
Forum : kazhuhu Group


ட்டுரை கீழே:
 
ரேடியோ கேட்டிருப்பீர்கள், ரேடியோ ஸ்டேஷன் பார்த்திருக்கிறீங்களா? நான் பார்த்திருக்கிறேன் ஏன் ரேடியோவில் பேசியே இருக்கிறேன்! நான் கொடுத்த முதல் நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது.

எனக்கு மறதியும் சந்தேகமும் ஒட்டிக்கொண்டு பிறந்தவை. வீட்டைவிட்டு வெளியே கிளம்பி சற்றுத் தூரம் நடந்து வந்தபின்தான் பொட்டு வைத்துக்கொண்டோமா என்ற சந்தேகம் வரும்; கேஸ் சிலிண்டரை அணைத்துவிட்டு வந்தோமா என்ற சந்தேகம் வரும். நடந்து போய்க்கொண்டு இருக்கும் போது திடீரென ஒரு கால் கொலுசிலிருந்து மட்டும் சத்தம் வராது.. திருகை டைட் செய்ய மறந்துவிட்டதால் கழண்டு விழுந்துவிட்டதோ என்று சந்தேகம் வரும்; எல்லாம் சரியாக இருந்தாலும் எதையோ ஒன்றை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டோமா என்ற சந்தேகம் வரும். அதுபோலத்தான் இப்போது எனக்குக் கதையை எழுதிவிட்டோமா இல்லையா என்ற சந்தேகம் வர, இரவு முழுவதும் எதற்காகக் கண்விழித்திருந்தோம் என்ற லாஜிக் இடிக்கவே எழுதியாகிவிட்டது என்று உறுதி செய்துகொண்டு நிதானித்தபோது நிலையத்திற்கு வந்து சேர்ந்திருந்தேன். சேர்ந்த இடம் “All India Radio Tirunelveli (AIR Tirunelveli / Akashavani Tirunelveli)” வானொலி நிலையம்.

அன்று... தோழியின் கையைக் கோர்த்துக்கொண்டு என் மனதின் அதிர்வுகளை அவளிடமும் கொஞ்சம் கடத்திவிட்டு வந்திருந்த அனைவரும் உள்ளே அடியெடுத்து வைத்தபோது எனக்கு வயது பதினொன்று. உள்ளே நுழைந்தால் அப்படி ஒரு Pin drop silence. வரவேற்பரையில் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தபடி காத்திருந்தோம். அருகில் வாத்தியக் கருவிகளுடன் சிலர் தங்களது இசைநிகழ்ச்சியின் பதிவிற்காக அழைப்பை எதிர்நோக்கி அமர்ந்திருந்தனர். சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பின் “இளைய பாரதம்” நிகழ்ச்சிக்காக வந்திருந்த நாங்கள் அழைக்கப்பட்டோம்.

அவ்வளவு சுத்தமாகவும் கம்பள விரிப்புடனும் அழகாகப் பராமரிக்கப்பட்ட அந்த அறையினுள்ளே கண்ணாடியால் தடுக்கப்பட்ட ரெக்கார்டிங் பிரிவு ஒரு பெரிய ரெக்கார்டிங் கருவியோடு இருந்தது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குதல் தவிர நான் கலந்துகொண்டது ஒரு குழுப்பாடல். இந்திரா படத்திலிருந்து அச்சமச்சமில்லை. குழுவிலிருந்த அனைவரும் சேர்ந்து உணர்ச்சிவசத்துடன் பாடலைப் பாடிவிட்டு ரெக்கார்டிங்கை முடித்தபின்பு "இன்னும் கொஞ்சம் நல்லா பாடியிருக்கலாமோ ?" என்று நினைத்த போது தான் தெரிந்தது திரைப்படப் பாடல்களை அந்த நிகழ்ச்சியில் அவர்கள் ஒலிபரப்புவதில்லை என்பது! சரியென்று தொகுத்து வழங்குதலை முடித்துவிட்டு, ஆசிரியருடன் இணைந்து நண்பர்களுக்கும் உதவி செய்துவிட்டு வெளியே வரும் தருவாயில் அனைவரது ரெக்கார்ட் செய்யப்பட்ட குரல்களும் ஓடவிட்டுக் காட்டப்பட்டன. முதன்முறையாக ரெக்கார்ட் செய்யப்பட்ட குரலைக் கேட்டபோது அப்படியே அதிர்ந்து போனேன் “என் குரலா இது” (எனக்குப் பிடிக்கவில்லை) என்று! கூச்சமாக இருந்தது. வெளியே வந்தபின்பு தான் தெரிந்தது ஏறத்தாழ அனைவருக்கும் இதே அனுபவம் என்று. இதுபோல் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் இன்னும் சில நிகழ்ச்சிகள் ஆகாஷவாணி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி வானொலி நிலையங்களில்.

உள்ளே வந்த என்னிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு எனது ஸ்கிரிப்ட் சரிபார்க்கப்படத் தரச்சொல்லிக் கேட்கப்பட்டது. கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். இப்பொழுதும் இளையபாரதம் நிகழ்ச்சிக்காகத் தான் அழைக்கப்பட்டிருந்தேன். பதினைந்து நிமிடங்கள் கதை சொல்ல வேண்டும். அதற்காகப் பத்துப் பக்கங்களுக்கும் மேலாக எழுதி வைத்திருந்தேன். சிறிது நேரத்தில் மேலே வரச்சொல்லி அழைப்பு வந்தது. சென்றேன். சற்றே வயதில் பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்து என் கதையைப் படித்துக்கொண்டு இருந்தார். மேலே கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

எந்த ஒரு படைப்பாக இருப்பினும் முதலில் அதனைப் படைப்பவருக்கு அதில் முழுதிருப்தி இருக்க வேண்டும். அவருடைய சொந்த விமர்சனங்களுக்கு அப்பால் அது இருக்கவேண்டும். அதற்காக, படிப்பவர்களது பார்வைகளின் கோணங்களை எல்லாம் யூகித்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி யூகிக்கவும் முடியாது! இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம்.. இட்லிவடைக்காக ஒரு கட்டுரை எழுதலாம். பொதுவாக வாசகர்களின் கமெண்ட்டுகள் எவ்வாறு இருக்கும் என்பதை நம்மால் யூகித்துக் கொள்ள முடியும். ஆனால் “மஞ்சள் கமெண்ட்”? அதை யூகிக்கவே முடியாது. ஏனென்றால் எழுதுபவர்க்கே தான் என்ன எழுதப் போகிறோம் என்பது எழுதிமுடித்து வெளியிடும் வரை தெரியாது...! :-) அவ்வாறு எதைப் பற்றியும் யோசிக்காமல் கடகடவென்று நான் எழுதியிருந்த சிறுகதை அது.

சில நிமிடங்களுக்குப்பின் நான் அழைக்கப்பட்டேன். ஒரு சிறு அறிமுகத்திற்குப் பின்னர், “என்ன கதை எழுதியிருக்கீங்க? சொல்லுங்க” என்றார். எதிர்பாராத இந்தக் கேள்வியை எதிர்பார்த்துக் காத்திருந்தவள் போலத் தொண்டையைச் செருமிக்கொண்டு கதையைச் சுருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தேன். முடித்தானவுடன் சற்று நேரம் அமைதி. அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். பேச ஆரம்பித்தார்..

“சிறுகதை என்பது சுருக்கமாக இருக்க வேண்டும். அதில் வரலாறு தேவையில்லை. அதிகமான வர்ணனை தேவையில்லை. கதாபாத்திரங்கள் நிறைய இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு சம்பவத்தைக் கதையாக்கிக் கூட சிறுகதை எழுதலாம். நீங்கள் எழுதியிருக்கும் இந்தக் கதையின் முடிவு தொடக்கத்திலேயே யூகிக்க முடிந்ததாக இருக்கிறது. ஒரு சிறுகதையின் முடிவு அதனை வாசிப்பவரின் யூகத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். ஒரு ட்விஸ்ட் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். மற்றபடி உங்களின் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்” என்று பேசி முடிக்கும்போது நான் தலையசைத்து ஆமோதித்துக் கொண்டிருந்தேன்.

அதன் பின்னர் ரெக்கார்டிங் அறை. முதன்முறையாக அறையில் நான் மட்டும் தனியாக! எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னர் கண்ணாடிக்கு அந்தப் பக்கம் இருந்த அந்த அலுவலர் கையசைத்துப் பேசச் சொல்லிச் சைகை காட்டினார். நான் பேசிக்கொண்டிருக்கும்போதே கதவைத் திறந்து என்னிடம் வந்துவிட்டார். நான் எதிர்பார்த்தேயிராத ஒரு கேள்வி. “உங்களுக்குத் தொண்டை கட்டியிருக்கிறதா?” என்று. அவமானம்! “இல்லை.. என் குரலே இப்படித்தான்” என்றதும் (வேறு வழியின்றி) ரெக்கார்டிங் தொடர்ந்தது.

இன்னொரு விசயம், AIR-ல் நிகழ்ச்சிகள் வழங்கியதற்காக அளிக்கப்படும் சன்மானம். நம் பெயரில் Rs200/- அடங்கிய காசோலை தருவார்கள்! வாழ்க்கையில் முதன்முறையாக என் உழைப்பிற்குக் கிடைத்த ஊதியம் என அவ்வளவு மகிழ்ச்சி. நம்மாலும் முடியும் என ஒருவித நம்பிக்கையூட்டியது. ஒவ்வொரு முறையும் அளிக்கப்படும் காசோலையை வீட்டிற்குக் கொண்டுவந்து அம்மா அப்பாவிடம் காட்டிவிட்டு, மறக்காமல் இரண்டு தம்பிகளிடமும் காட்டி, “நான் இப்படி, நான் அப்படி” என ஒரு பில்டப் செய்துவிட்டு வங்கிக்குச் சென்று என் கணக்கில் அதைக் காசாக்கிச் சேர்க்கும்போது அடையும் ஆனந்தம் அளவில்லாதது

இவ்வாறு மூன்று மாதத்திற்கு ஒருமுறையென ஒன்றரை வருடங்கள் திருநெல்வேலி நிலைய ஆல் இண்டியா ரேடியோவில் கதை சொல்லிக் கொண்டிருந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு முறையேனும் எனது நிகழ்ச்சியை என் பெற்றோருக்கோ நண்பர்களுக்கோ போட்டுக் காட்டியதில்லை...! ஏன், நானே கூட கேட்டதில்லை!! :-) ஆனால் தாமாகக் கேட்டுவிட்டு யாராவது கருத்து சொல்லியபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ஒரு முறை என் தம்பி கேட்டுவிட்டான் அதை பற்றி கடைசியில் அதற்கு முன் ரேடியோ பற்றி கொஞ்சம்...

தகவல் மற்றும் பொழுதுபோக்கு - இவைதான் அகில இந்திய வானொலி நிலையங்கள் வழங்கும் நிகழ்ச்சி நிரல்களின் பின்னனி. அதுவும் கிராமங்கள் நிறைந்த திருநெல்வேலியில் விவசாயம், பொதுச்சிந்தனைகள், கல்வி, ஆன்மீகம் என்று எல்லாம் போகக் கடைசியாகப் பொழுதுபோக்கு அம்சங்களான இயல், இசை, நாடகம் போன்றவை. இளைஞர்களுக்கு எனச் சில சிறப்பு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுச் செய்திகள், வகுப்பறையில் எடுப்பது போன்ற பாடங்களும் உண்டு.

அதிகாலையில் வானலியின் கூடவே வானொலியையும் ஆன் செய்துவிட்டு ஆகாசவாணியின் அலைவரிசையை அட்ஜஸ்ட் செய்துகொண்டு அசையாமல் நின்றிருந்து செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்ததும், திரையிசைக் கானங்களுக்காகத் தினந்தோறும் காத்துக்கிடந்ததும், அறிவியல் விவசாயம் ஆன்மீகம் என எதைப் பேசினாலும் விதியே எனக் கேட்டுக்கொண்டிருந்ததும் எந்தக் காலம்?

உள்ளங்கைக்குள் உலகம் வந்துவிட்ட காலமிது. வியாபார நோக்கில் செயல்பட்டு வரும் ஊடகங்கள் விளம்பரங்களுக்காக மக்கள் விரும்பும் அத்தனை சேவைகளையும் செய்யத் தயாராக இருக்கின்றன. தனியார் FM ரேடியோ சேனல்களில் இருபத்து நான்கு மணிநேரமும் பாடல்கள் ஒலிபரப்பப் படுகின்றன. அறிவுரைகள் என்றாலே “நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்குறது” என்று பல அடி தூரங்கள் பாய்ந்து ஓடும் இந்தக் காலத் தலைமுறையினர் AIR-ல் வரும் சொற்பொழிவுகளையும் சத்சங்கங்களையும் கேட்பதென்பது மண்ணிலிருந்து விண்ணை நோக்கி மழை பெய்வதற்குச் சமம்.

தனக்கென சில சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்டு செயல்பட்டு வரும் பிரசார் பாரதியின் ஒரு பிரிவான AIR, வாசகர்களுடன் நேரடி உரையாடல், நேயர் விருப்பப் பாடல்கள் போன்று நிகழ்ச்சிகளில் சில புதுமைகளைப் புகுத்திக்கொண்டு செயல்பட்டு வந்தாலும் இன்னும் கூட தனியார் வானொலி நிலையங்களுக்கு இணையாக மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை. கிராமப்புற மக்களும் அந்தக் காலத்து ஆட்களும் இதைப்போல் இன்னும் சிலரும் முறையாகத் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகின்றனர் என்றாலும் கூட இன்றைய காலக்கட்டத்தில் AIR கேட்பவர்கள் நம்மில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு :-( தான் பதிலாகக் கிடைக்கிறது...!!!

இப்ப என் தம்பி கேட்ட நிகழ்ச்சி பற்றி - என் முதல் தம்பி ஒருமுறை இவள் அப்படி என்ன தான் கதை சொல்கிறாள் கேட்போம் என்று கிளம்பி ஒரு முறை, நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும் நேரத்தை என்னிடமே கேட்டு அறிந்துகொண்டு அம்மா, அப்பா, பக்கத்து வீட்டுப் பாட்டிகள், குட்டீஸ் என ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு என் கதையைக் கேட்க அமர்ந்துவிட்டான். ஒருவழியாக எனது 15 நிமிடக் கதை ஓடி முடிந்தது. நான் அமைதியாக ஒருபுறம் அமர்ந்திருக்க, வாண்டுகள் எல்லாம் ஒன்றும் புரியாமலே “கொல்”லென்று சிரிக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாட்டி மட்டும், “ஆமா தாயீ.. கதை எப்பச் சொல்லுவ” என்று கேட்டதே ஒரு கேள்வி.. அதற்கு நான் ரியாக்ஷன் காட்டினேனோ இல்லையோ.. என் உடன்பிறந்த மற்றும் பிறவா வானரங்கள் காட்டிய ரியாக்ஷனை வார்த்தைகளால் வருணிக்க முடியாது. இந்தக் கதையெல்லாம் உன் மரமண்டைக்குப் புரியாது என்று தம்பியைப் பார்த்து அப்போதைக்குக் கூறிச் சமாளித்துவிட்டாலும், அதன்பிறகு, கதை எழுதினேன் கட்டுரை எழுதினேன் கவிதை எழுதினேன் என்று வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்வதேயில்லை! :-)

Read More...